காசாவில் பல்வேறு பகுதிகளை குறிவைத்து நேற்று இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 330 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காசா பொதுமக்கள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளதாவது: காசா முனைப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் நேற்று நடத்திய தீவிர தாக்குதலில் 330 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆவர். மேலும், இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரமலான் நோன்பு தொடங்கியுள்ள மாதத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல் காசா மக்களிடையே திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஜனவரி 19-ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் வடக்கு காசா, டெய்ர் அல்-பலாஹ், கான் யூனிஸ், ரஃபா, தெற்கு காசா முனைப் பகுதிகளை குறிவைத்து இந்த மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
காசா தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ காசாவில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலக்குகளை குறிவைத்து தீவிரமாக தாக்குதல் நடத்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை அடுத்து, காசாவை ஒட்டிய பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கூறுகையில், “ இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோன்று, அமெரிக்க அதிபரின் தூதர் ஸ்டீவ் விட்கோப் உள்ளிட்ட அனைத்து மத்தியஸ்தர்களின் கோரிக்கைகளையும் ஹமாஸ் நிராகரித்துவிட்டது. இதையடுத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காசா போர் தொடங்கியது. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 48,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 1.12 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்