வங்கதேச எல்லையில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 62,200 பென்சிடைல் இருமல் மருந்து பாட்டிலை பிஎஸ்எப் பறிமுதல் செய்துள்ளது.
இந்திய-வங்கதேச எல்லை அருகே மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்திலிருந்து வங்கதேசத்துக்கு சில வகை போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எப்) மாநில போலீஸாரும் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சோதனை நடத்தினர். அப்போது பூமிக்கு அடியில் 7 அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட 3 இரும்பு கன்டெய்னர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்பிலான பென்சிடைல் இருமல் மருந்து பாட்டில்களை கைப்பற்றி இருப்பதாக மேற்கு வங்க போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பூமிக்கு அடியில் இருந்த கன்டெய்னர்களில் இருந்து 62,200 பென்சிடைல் இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். இது கடந்த ஓராண்டில் மேற்குவங்கத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட மருந்து பாட்டில்களில் 50% ஆகும்.
கடந்த 2024ல் ரூ.3.6 கோடி மதிப்பிலான 1,73,628 பென்சிடைல் பாட்டில்களை பிஎஸ்எப் தெற்கு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் சட்டவிரோதமாக வங்க தேசத்துக் கடத்தப்பட இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்துவார்கள்” என்றார்.
இந்த மருந்து பாட்டிலின் விலை இந்தியாவில் ரூ.160 ஆக உள்ளது. வங்கதேச எல்லையை அடைந்ததும் இதன் விலை ரூ.300 முதல் ரூ.500 ஆக உயர்ந்து விடுவதாகவும், பின்னர் ரூ.2 ஆயிரம் வரை விறகப்படுவதாகவும் கூறப்படுகிறது. வங்கதேசத்துக்கு கடத்தப்படும் இந்த மருந்து அங்கு மதுவுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.