ஜெருசலேம்: காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்களை ஹமாஸ் இயக்கம் விடுதலை செய்தது.
காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. முதலில், பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். பதில் நடவடிக்கையாக பாலஸ்தீன கைதிகள் 95 பேரை இஸ்ரேல் விடுவித்தது.
இந்நிலையில், 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20), நாமா லெவி (20), லிரி அல்பாக் (19) ஆகிய நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றினர்.
காசா எல்லை அருகே உள்ள நகல் ஓஸ் என்ற ராணுவ முகாமில் இவர்கள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பணியாற்றி போது, அவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். இவர்களுடன் சேர்ந்து கடத்திச் செல்லப்பட்ட மேலும் 3 பெண் வீரர்களில் ஒருவர் காசாவில் பிணைக் கைதியாக உள்ளார். ஒருவரின் உடல் இஸ்ரேல் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு பெண் வீரரை இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்தாண்டு அக்டோபரில் மீட்டனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வந்துள்ள இவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர். இஸ்ரேல் பெண் வீரர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, பாலஸ்தீன கைதிகள் சுமார் 200 பேரை இஸ்ரேல் நேற்று விடுவித்தது.
காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் 98 பேரில் இதுவரை 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளும் அடுத்தடுத்து மீட்கப்படுவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.