நடிகை பாலியல் புகார் வழக்கு: இன்று டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு


ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பிற்கு நீதிமன்றம் தண்டனையை உறுதிபடுத்திய நிலையில், இன்று தண்டனையை அறிவிக்க உள்ளது.

ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார்.

கடந்த 2006-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் குற்றஞ்சாட்டினார். மேலும் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தன்னுடனான பாலியல் உறவு விவகாரத்தை வெளியே கூறக் கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டெனியல்ஸ் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து டொனால்டு டிரம்ப் போலி வணிக பதிவுகளை உருவாக்கி 1,30,000 அமெரிக்க டாலர்களை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டிரம்பிற்கு எதிராக பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கூறப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றம் தண்டனை அறிவிக்கிறது.

இந்த தண்டனை அறிவிப்பின் போது டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் நேரிலோ, காணொளி காட்சி மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளை, இந்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டு டிரம்ப் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

x