ஜஸ்டின்​ ட்ரூடோ பதவி ​விலகினார்​: கனடாவின் அடுத்த பிரதமர் அனிதா ஆனந்த்?


இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 170 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி 184 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார்.

கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு 157 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2021-ம் ஆண்டில் அவர் நாடாளுமன்றத்தை கலைத்தார். அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சிக்கு 160 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மீண்டும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் பிரதமராக பதவியேற்றார்.

வரும் அக்டோபரில் கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஆளும் லிபரல் கட்சியில் பிரதமர் ஜஸ்டினுக்கு எதிராக பெரும்பான்மையான எம்பிக்கள் போர்க்கொடி உயர்த்தினர். 4 மூத்த அமைச்சர்கள் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தனர். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் ஜஸ்டினுக்கு 16 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு அளித்தனர். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரேவுக்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த சூழலில் லிபரல் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஜஸ்டினுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மூத்த தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கு முன்பாக நேற்று முன்தினம் பிரதமர் பதவியை ஜஸ்டின் ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அந்த கட்சி முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக லிபரல் கட்சி தொண்டர்களிடையே விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார்.

இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும் லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த், தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர். இந்திய வம்சாவளியை சேர்ந்த லிபரல் கட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் சாஹலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார். இவர்கள் தவிர லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் மெலானி ஜோலி, கிறிஸ்டி கிளார்க், மார்க் கார்னி, கிறிஸ்டியா பிரீலேண்ட், டோமினிக் லீபிளாங்க் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

வரும் 27-ம் தேதி கனடா நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது ஆளும் லிபரல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இதன்படி வரும் மார்ச் மாதம் கனடா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இப்போதைய நிலையில் ஆளும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, "நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் கட்சியின் ஆட்சி கவிழுமா அல்லது அந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்குமா என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை. அரசு கவிழ்ந்து உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் அல்லது லிபரல் கட்சியின் புதிய பிரதமர் பதவியேற்று வரும் அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

x