சென்னை: திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நிலநடுக்கத்துக்கான மையத்தின் தகவலின் படி, முதலில் நேபாளம் - திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஜிஜாங்-கில் செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணிக்கு 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சக்தி வாய்ந்தது மற்றும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதேபோல் ஷிகாட்ஸ் நகரில் 6.8 ரிக்டர் அளவிலான நடுக்கம் பதிவானதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜிஜாங் நகரத்தில், 4.7 மற்றும் 4.9 என இரண்டு ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும், டெல்லி - என்சிஆர் மற்றும் பிஹார் தலைநகர் பாட்னா, மாநிலத்தின் வட பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.