அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க லாரியை அதிவேகமாக ஓட்டி 10 பேர் படுகொலை


நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கூட்டத்தில் லாரி புகுந்து மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குக் காரணமான மர்ம நபர் போலீஸார் சுட்டதில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று அதிகாலை புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது. நியூ ஆர்லியன்ஸ் நகரின் மையப்பகுதியிலுள்ள கனால் மற்றும் பார்பன் தெருப்பகுதியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டத்தை நோக்கி வேகமாக வந்த லாரி, கூட்டத்தினர் மீது படுவேகத்தில் மோதியது. மேலும், லாரியை இயக்கிய டிரைவர் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், டிரைவரை நோக்கி சுட்டனர். இதையடுத்து போலீஸார் மீதும் அந்த மர்ம நபர் சுட்டார். இறுதியில் போலீஸார் சுட்டதில் அந்த மர்ம நபர் உயிரிழந்தார்.

கூட்டத்துக்குள் லாரி புகுந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் அவசரப் பிரிவு அதிகாரிகள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது லாரி புகுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லாரியை ஓட்டி வந்த மர்ம நபர் உயிரிழந்துவிட்டார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் புகுந்து நாசவேலையைச் செய்யும் நோக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரடெண்ட் ஆன் கிர்க்பாட்ரிக் கூறும்போது, “அந்த மர்ம நபர், போலீஸாரை நோக்கியும் சுட்டார். இதில் எங்களது 2 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை. வேண்டுமென்றே அந்த லாரியை மர்ம நபர் படுவேகமாக ஓட்டி வந்துள்ளார்" என்றார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை மிகக் கொடூரமான வன்முறைச் செயல் என்று லூசியானா மாநில ஆளுநர் ஜெஃப் லாண்ட்ரி தெரிவித்துள்ளார்.

x