ரஃபா நகரின் தற்காலிக முகாம்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்


நியூயார்க்: ரஃபா நகரிலுள்ள தற்காலிக முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை (மே 26) இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ரஃபா தற்காலிக முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவறானது என்றும். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இருந்தும் இந்த தாக்குதலில் ஹமாஸின் இரண்டு மூத்த நிர்வாகிகளை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

x