ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற ரிமோட் கன்ட்ரோல் குண்டு வெடிப்பில் சிக்கி ராணுவ துணை தளபதியும், அவரது உதவியாளரும் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் உக்ரைன் ராணுவம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா ராணுவத்தின் துணை தளபதி லெப்டினனட் ஜெனரல் இகார் கிரில்லோவ். இவர்தான் ரஷ்யா ராணுவத்தின் அணு ஆயுதம், ரசாயண ஆயுதம் மற்றும் உயிரியல் ஆயுதப் படைகளை மேற்பார்வையிடுகிறார். இவர் உக்ரைன் போரில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டார். இதனால் இவரை தேடப்படும் குற்றவாளியாக உக்ரைன் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தங்கியிருந்த கட்டிடத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் லெப்டினன்ட் இகார் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர். ரஷ்ய அதிபரின் கிரம்ளின் மாளிகையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இகார் கிரில்லோவ் தங்கியிருந்தார். அந்த கட்டிடத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த குண்டு பொருத்தப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தீவிரவாத செயல் என ரஷ்யா கூறியுள்ளது. இந்த படுகொலையின் பின்னணியில் உக்ரைன் ராணுவம் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உக்ரைன் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘கிரில்லோவ் போர் குற்றவாளி. உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த அவர் உத்தரவிட்டார். உக்ரைன் மீது 4,800 ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. மனிதாபிமானம் இல்லாமல், ரசாயண ஆயுத்களை பயன்படுத்த உத்தரவிட்டதற்காக கிரில்லோவ்வுக்கு பிரிட்டன் தடை விதித்தது. அவரை கொன்றது முற்றிலும் சரியான முடிவு. உக்ரைன் மக்களை கொன்றவர்கள் அனைவருக்கும் இது போன்ற மரணங்கள் காத்திருக்கின்றன’’ என்றது.