சியோல்: ராணுவ அவசர நிலை பிரகடன விவகாரத்தைத் தொடர்ந்து, தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
தென் கொரிய அதிபராக இருப்பவர் யூன் சுக் இயோல். இவருக்கும், தென் கொரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் நீண்ட காலமாகவே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், அதிபர் யூன் சுக் இயோல் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக கடந்த 3-ம் தேதி திடீரென அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் 6 மணி நேரத்தில் அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றார்.
பட்ஜெட் மசோதாவை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காத காரணத்தால்தான் தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 45 வருட தென் கோரிய அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்டது இதுவே முதல் முறை ஆகும். இதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.
ஆனால், அதிபர் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான தீர்மானத்தைப் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆனால் மக்களிடையே வலுக்கும் எதிர்ப்பால் சொந்த கட்சியினரே அதிபர் யூனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்கிடையே நேற்று 2-வது முறையாக யூன் பதவிநீக்கம் தொடர்பாக புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்தது.
இதன் மீதான வாக்கெடுப்பு நேற்று தென் கொரிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் யூனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வாக்கெடுப்பின்போது மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3 பேர் வாக்களிக்க மறுத்தனர். 8 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக பதவிநீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிபர் யூன் உடனே பதவியை விட்டு விலகமாட்டார் என்று தெரியவந்துள்ளது. தென் கொரிய நாட்டின் சட்டப்படி, இந்த வெற்றி பெற்ற தீர்மானம் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், பதவி நீக்கம் முற்றிலுமாக செயல்பாட்டுக்கு வர பல வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
அந்த நீதிமன்றத்தில் இருக்கும் 9 நீதிபதிகளில் 6 பேர் பதவி நீக்கத்தை உறுதி செய்து வாக்களித்தால் மட்டுமே, யூன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். அதிபர் யூனை பதவி நீக்கம் செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்துக்கு 180 நாட்கள் வரை அவகாசம் இருக்கிறது. இதனிடையே, இந்த இடைப்பட்ட காலத்தில் யூன் சுக் நியமித்த பிரதமர் ஹான் டக்-சூ, அரசாங்கத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.