டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக ஒவ்வொரு முக்கிய நகராக கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வந்தனர்.
பின்னர் தீவிர தாக்குதல் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். அதற்கு முன்னதாக அதிபர் ஆசாத் தப்பியோடினார். அவர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் குழுவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தற்போது அதிபர் மாளிகை உட்பட டமாஸ்கஸ் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து முகமது அல் பஷீர் என்பவரை தற்காலிக பிரதமராக கிளர்ச்சியாளர்கள் நியமித்துள்ளனர். வரும் மார்ச் 1-ம் தேதி வரை அவர் பிரதமராக பதவி வகிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். முகமது அல் பஷீர் பிரதமர் பொறுப்பேற்றவுடன் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சிரியாவில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், போர் சூழல் நிலவுவதால் சிரியாவில் தங்கியுள்ள இந்தியர்கள் 75 பேரை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்கள் சிரியாவில் இருந்து லெபனான் வழியாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விரைவில் விமானத்தில் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. மீட்கப்பட்ட 75 பேரில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 44 புனித யாத்ரீகர்கள், சிரியாவின் சைதா ஜெய்நாப் பகுதியில் சிக்கி தவித்தனர். இந்திய தூதரகம் மூலம் தகவல் அறிந்து அவர்கள் மீட்கப்பட்டனர் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவின் டமாஸ்கஸ், லெபனானின் பெய்ரூட் ஆகிய இடங்களில் உள்ள இந்தியதூதரகத்தின் மூலம் தேவையான உதவிகள் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியர்கள் சிலர் சிரியாவில் இருந்து நாடு திரும்ப மறுத்துள்ளனர். அவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், இந்திய தூதரகத்தின் அவசர உதவி எண் +963 993385973 என்ற தொலைபேசி எண், வாட்ஸ் அப் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.