இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது: மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு


புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தை வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் உற்பத்தியை தொடங்க நாங்கள் தயார் என அறிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதலீடு கூட்டமைப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அதிபர் புதின் பேசியதாவது: இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அந்நியை முதலீட்டை ஈர்க்கிறது. இதன் மூலம் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த முடியும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமாக உள்ளன. இதனால் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ரஷ்யா தயாராக உள்ளது. ரஷ்யாவின் ராஸ்நெப்ட் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் 20 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க, பிரிக்ஸ் நாடுகள் சிறந்த ஒத்துழைப்பை அளிக்கின்றன. பிரேசிலில் அடுத்தாண்டு நடைபெறும் பிரிக்ஸ் கூட்டத்தில், ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய துறைகளை உறுப்பு நாடுகள் அடையாளம் காண வேண்டும்.

இவ்வாறு அதிபர் புதின் கூறினார்

x