பல்லாவரத்தில் வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழப்பு: பல்லாவரம் கண்டோன்மென்ட், 6-வது வார்டு, மலைமேடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாளும், தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டு, காமராஜர் நகரில் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் பாலாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மலைமேடு பகுதிக்கு புதன்கிழமை காமராஜர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களை காட்டிலும் தற்போது விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், கழிவு நீர் கலந்து நிறம் மாறிய நிலையில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு அப்பகுதிகளை சேர்ந்த பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அங்கு, சிலர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். சிலர் தனியார் மருத்துவமனையிலும், சென்னையில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதன்கிழமை காலை பலர் இதே பாதிப்புகளால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 18 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பல்லாவரம் காமராஜர் நகரை சேர்ந்த 56 வயது திருவீதி கிருஷ்ணன் என்பவரும், கண்டோன்மென்ட் பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 47 வயது மோகனரங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 19 பேரும், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கன்டோன்மென்ட் மற்றும் தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அமைச்சர் சொல்வது என்ன? - வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதை அடுத்து தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விவரத்தை கேட்டறிந்து பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், குடிநீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் முகாமிட்டு வீடாக சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், “தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வயிற்றுப்போக்கு பாதிப்பு உள்ளது. இவர்களுக்கான பாதிப்பு என்னவாக இருக்கும் என்று ஆராய்வதற்கு மாவட்ட ஆட்சியர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
குடிநீரில் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்கின்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. அதுவும் கூட மலைமேடு என்கின்ற ஒரு டிஃபன்ஸ் பகுதியில் இருக்கின்ற ஒரு குடியிருப்பு. அங்கிருந்து தான் இவர்களுக்கு குடிநீர் வருகின்றது. அந்த குடிநீரில் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்ற வகையில் தற்போது அந்த குடிநீரின் மாதிரியை கிங் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக குடிநீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் என்பது வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் ஆனாலும் கூட இந்த பிரச்சனையை தீவிர தன்மையை கருத்தில் கொண்டு மிக விரைவில் அந்த பரிசோதனை முடிவுகளை பெற வலியுறுத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.
மேலும், “இப்போது உடனடியாக நமது மாநகராட்சி ஆணையர் குடிநீரை பொதுமக்கள் இனிமேல் பருகுவதற்கு தடை விதித்து மாநகராட்சி சார்பில் வாகனங்களின் மூலம் குடிநீர்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்! - சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. ஓர் ஆய்வுக்கு இரண்டு செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் செலுத்தப்படுவது உலகில் இதுவே முதல்முறை.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் அரசு மேல்முறையீடு: தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால், அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும் என்றும் தமிழ்நாடு காவல் துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புயல் நிவாரணத்துக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
“திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்” - அதிமுக உறுதிமொழி - “குடும்ப ஆட்சியில் தந்தை, மகன், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்” என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியினர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, “குடும்ப ஆட்சியில் தந்தை, மகன், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தேவேந்திர ஃபட்னாவிஸ், ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
“ஏக்நாத் மீண்டும் முதல்வராக மாட்டார்” - “ஏக்நாத் ஷிண்டே சகாப்தம் முடிந்துவிட்டது. இப்போது அவருடைய பயன்பாடு முடிந்துவிட்டது. எனவே, அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஷிண்டே மீண்டும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக முடியாது” என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன ஆர்ப்பாட்டம்: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றே மாதத்தில் கவிழ்ந்த பிரான்ஸ் அரசு: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், பிரதமரான மூன்றே மாதத்தில் மிஷேல் பார்னியர் பதவியை இழந்துள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மிஷேல் பார்னியர் 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இத்தகைய குறுகிய காலத்தில் பிரதமர் பதவியை இழந்தவராக அவர் அறியப்படுகிறார்.
எண்ணும் எழுத்தும் - கோரிக்கை: எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மதிப்பீட்டு பணிக்கான கள ஆய்வாளர்கள் பணியிலிருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.