வடமேற்கு பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர்பக்துன்கவா மாகாணம், குர்ரம் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குர்ரம் மாவட்டத்தில் ஷியா முஸ்லிம்கள் வந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.
பிரச்சினார் நகரில் இருந்து பெஷாவர் நோக்கி ஷியாக்கள் செல்லும் வழியில் இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.