தி ஹேக்: இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் கரீம் கான் என்பவர் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் மூத்த தலைவர் முகமது டெய்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் நேற்று பிடிவாரன்ட் பிறப்பித்தது.
இதுகுறித்து சர்வதேச சட்ட நிபுணர்கள் கூறியதாவது: சர்வதேச நீதிமன்றத்தால் யாரையும் கைது செய்ய முடியாது. அந்தந்த நாடுகளின் காவல் துறைகளுக்கு உத்தரவு மட்டுமே பிறப்பிக்க முடியும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் ஏற்கெனவே பிடிவாரன்ட் பிறப்பித்து உள்ளது. அவரை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
இதேபோல இஸ்ரேல் பிரதமர், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோரும் கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெய்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவரது மரணம் உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.