உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதம் பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ரஷ்யா எடுத்துள்ளது.
நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. போர் தொடங்கி கடந்த புதன் கிழமையுடன் 1,000 நாட்கள் நிறைவடைந்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் உட்பகுதிகள் மீது, தாங்கள் வழங்கிய தொலைதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த அமரிக்க அதிபர் பைடனும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கினர். இந்த அனுமதி கிடைத்த சில மணி நேரத்தில் ரஷ்யா மீது அமெரிக்க தயாரிப்பு ஏடிஏசிஎம்எஸ் மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு ‘ஸ்டாம் ஷேடோ’ ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் ஏவியது. ஸ்டாம் ஷேடோ ஏவுகணைகளை, நடு வானில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியது.
இதையடுத்து ரஷ்யா தனது அணு ஆயுத கொள்கையை மாற்றியது. அணு ஆயுதம் வைத்திருக்காத நாடுகள் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் வழங்கினார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த இந்த புதிய கொள்கை வழிவகுத்துள்ளது.
இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலை தூர ஏவுகணை (ஐசிபிஎம்) மூலம் ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த வகை ஏவுகணையில் அணு ஆயுதம் மற்றும் அணு அல்லாத ஆயுதம் இரண்டையும் பயன்படுத்த முடியும். ஆனால் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ஐசிபிஎம் ஏவுகணையில் அணு ஆயுதம் பயன்படுத்தவில்லை. உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இது குறித்து உக்ரைன் விமானப்படை விடுத்த அறிக்கையில், ‘‘உக்ரைனின் டினிப்ரோ நகர் மீது ரஷ்யா பல வித ஏவுகணைகளை நேற்று ஏவியது. இவற்றில் 6 ஏவுகணைகளை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். உக்ரைனின் கட்டமைப்புகளை முடக்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அஸ்த்ராகான் பகுதியில் இருந்து ஐசிபிஎம் ஏவுகணை வீசப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்த வகை ஏவுகணையை ரஷ்யா முதல் முறையாக தற்போது பயன்படுத்தியுள்ளது’’ என தெரிவித்துள்ளது. ஆனால் ஐசிபிஎம் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதா என தெரிவிக்கவில்லை. ரஷ்யாவின் வான் வழி தாக்குதலில் டினிப்ரோ நகரில் பல வீடுகள் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல் குறித்து பதில் அளிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அணு ஆயுத போரை தவிர்க்க அதிகபட்ச முயற்சிகளை ரஷ்யா மேற்கொள்கிறது’’ என தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும், உக்ரைனும் தொலைதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி தங்கள் வலிமையை காட்டி வருகின்றன. இது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. அதிபர் புதினும், ஜெலன்ஸ்கியும் போர் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்