நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணை மூலம் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்: கீவ் நகரில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா


நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணை மூலம் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில், ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தால் உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்பட்டது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. எனினும், தாங்கள் வழங்கிய நீண்டதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு விதித்திருந்தது.

இதனிடையே, அமெரிக்காவின் நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால், அமெரிக்கா, நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது போர் தொடுத்ததாக கருதப்படும் என அதிபர் விளாடிமிர் புதின் கடந்த செப்டம்பர் மாதம் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் போரை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், இப்போதைய அதிபர் ஜோ பைடன் நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்காவில் தயாரான நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இது தங்கள் நாட்டின் பிரியான்ஸ்க் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கீவ் நகரின் மீது வான் வழி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கீவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை அமெரிக்கா நேற்று மூடியது. அத்துடன் தூதரக ஊழியர்கள் மற்றும் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளும் கீவ் நகரில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை நேற்று மூடின

x