நியூயார்க்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களை திருப்பி அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக, 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1,400க்கும் மேற்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட பழங்கால கலைப் பொருட்களில் சமீப காலம் வரை நியூயார்க் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்களும் அடங்கும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குற்றவியல் கடத்தல் நெட்வொர்க்குகள் மீதான தொடர்ச்சியான விசாரணைகளின் ஒரு பகுதியாக பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் நெட்வொர்க்குகள் தண்டனை பெற்ற கலைக் கடத்தல்காரர்களான சுபாஷ் கபூர் மற்றும் நான்சி வீனர் ஆகியோரால் இயக்கப்பட்டது. சுபாஷ் கபூர் ஒரு அமெரிக்க பழங்கால கடத்தல் வியாபாரி ஆவார். அவர் மில்லியன் டாலர் கொள்ளை நெட்வொர்க்கை நடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு அனுப்பப்பட்டார்.
ஜெர்மனியில் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கபூர் இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 2012 இல் டிஏ அலுவலகம் அவரைக் கைது செய்தது. கபூர் 2022 இல் பழங்காலப் பொருட்களைக் கடத்திய குற்றம் சாட்டில் இந்தியாவில் சிறையில் இருக்கிறார். அவரை நாடு கடத்துவது இன்னும் நிலுவையில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் முறையாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பழங்கால பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஜூலை மாதம் முதல் "கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
செப்டம்பரில், கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருட்களை அமெரிக்கா, இந்தியாவிடம் திருப்பி அளித்தது. இந்த கலைப்பொருட்கள் கிமு 2000 முதல் கிபி 1900 வரை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவை ஆகும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய கலாச்சார கலைப்பொருட்களின் மொத்த எண்ணிக்கை 578 ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஒரு நாடு திருப்பி அனுப்பிய அதிகபட்ச கலாச்சார கலைப்பொருட்கள் எண்ணிக்கை இதுதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.