கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது.
செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். ஆனால் அவரது என்பிபி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் திசாநாயக்க உத்தரவிட்டார்.
நேற்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 123 இடங்களைக் கைப்பற்றி, மேலும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதுவரை எண்ணப்பட்ட முக்கால்வாசிக்கும் அதிகமான வாக்குகளில் என்பிபி கூட்டணி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சி 18 சதவீத வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளார். இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெறும் 2 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வி கண்டுள்ளது.
திசாநாயக்கவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதன் அடையாளமாக, 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதன்முறையாக, தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதிகளில் என்பிபி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 8,821 பேர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.