ரோசோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு டோமினிகோ அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரிபீயன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடு டோமினிகோ. இந்த நாட்டில் சுமார் 80,000 பேர் வசிக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த 54 பேர் டோமினிகோ நாட்டில் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த நாட்டின் ஓட்டல் மற்றும் தங்க நகை வணிகத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அண்மை காலமாக இந்திய மாணவர்கள், டோமினிகோ நாட்டின் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.
அந்த நாட்டின் மக்கள் தொகையில் 94 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். எனினும் டோமினிகோ மக்களில் பெரும்பாலானோர் சுவாமிநாராயணனின் பக்தர்களாக உள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டோமினிகோ நாட்டுக்கு 70,000 கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் இண்டியா-கரிகோம் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது 'டோமினிகோ அவார்ட் ஆப் ஹானர்' என்ற விருதை காமன்வெல்த் தலைவர் சில்வைனி பெர்டன், பிரதமர் மோடிக்கு வழங்குவார்.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட 13 நாடுகளின் அரசுகள் பிரதமர் மோடிக்கு உயரிய விருதை வழங்கி உள்ளன. இந்த வரிசையில் டோமினிகோவும் இணைய உள்ளது.