அமெரிக்க உளவுத் துறை தலைவராக துளசி கபார்ட் நியமனம் - யார் இவர்?


வாஷிங்டன்: அமெரிக்க உளவுத் துறை தலைவராக துளசி கபார்ட் (43) நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சரவை, நிர்வாகிகளை அவர் இப்போதே நியமித்து வருகிறார். இந்த வரிசையில் அமெரிக்க உளவுத் துறை தலைவராக துளசி கபார்ட் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஹவாய் ராணுவ தேசிய படையில் துளசி இணைந்தார். கடந்த 2004, 2005-ம் ஆண்டுகளில் இராக் போரில் அவர் பணியாற்றினார். பின்னர் 2008, 2009-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் சார்பில் குவைத்தில் அவர் பணியாற்றினார். கடந்த 2015-ம் ஆண்டில் அவர் மேஜராகவும் கடந்த 2021-ம் ஆண்டில் லெப்டினென்ட் கர்னலாகவும் அவர் பதவி உயர்வு பெற்றார்.

தொடக்கத்தில் ஜனநாயக கட்சியில் இருந்த அவர், அந்த கட்சியின் சார்பில் 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022-ம் ஆண்டில் ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார். இதன்பிறகு பாக்ஸ் நியூஸ் சேனலில் இணைந்து பணியாற்றினார். அப்போது முதலே குடியரசுக்கு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடியரசு கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து, ட்ரம்பின் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

துளசியின் தந்தை மைக் கபார்ட், கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவர். அவரது தாய் கரோலும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஹவாயில் வசித்தபோது கரோல் இந்து மதத்துக்கு மாறினார். தனது பிள்ளைகளுக்கு இந்து மதம் சார்ந்த பெயர்களை சூட்டினார். இதன்படியே தனது 4-வது குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டார்.

சிறு வயது முதலே துளசி இந்து மதத்தில் தீவிர பற்று கொண்டிருந்தார். பகவத் கீதை உள்ளிட்ட புனித நூல்களை படித்து தேர்ச்சி பெற்றார். வெள்ளையினத்தை சேர்ந்த தீவிர இந்து பக்தராக அவர் உள்ளார். அவர் அமெரிக்க உளவுத் துறை தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அமெரிக்க அரசில் முக்கிய பொறுப்பு வழங்கிய டொனால்டு ட்ரம்புக்கு, துளசி நன்றி தெரிவித்துள்ளார்

x