ட்ரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு பொறுப்பு: மார்கோ ரூபியோ வெளியுறவு அமைச்சராக வாய்ப்பு


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு திறன்துறையின் (டிஓஜிஇ) தலைவராக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழில் முனைவோர் விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் நியமித்துள்ளார். அரசின் அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த துறைபுதிதாக உருவாக்கப்பட உள்ளது.

ட்ரம்பின் முந்தைய நிர்வாகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக இருந்த ஜான் ராட்கிளிப், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ-வின் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார். இதுபோல, ட்ரம்பின் பிரச்சாரக் குழு முன்னாள் மேலாளர் சுசீ வைல்ஸ் (67) வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் ஸ்டெபானிக் (40) ஐ.நா.சபையின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேனல் தொகுப்பாளரும் எழுத்தாளரும் அமெரிக்கா ராணுவ உயர் அதிகாரியுமான பீ்ட்டர் பிரையன் ஹெக்சேத் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்ஸ் (50), உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக தெற்கு டகோடா ஆளுநர் கிறிஸ்டி நோயம் (52), நிதித் துறை அமைச்சராக ஸ்காட் பெஸன்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர்: வெளியுறவுத் துறை அமைச்சர் பெயரை ட்ரம்ப் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், இந்தப் பதவிக்கு புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் மார்கோ ரூபியோ (53) நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை எட்டிப் பிடித்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். சீனா, ஈரான் நாடுகளுக்கு எதிரானவராக கருதப்படும் இவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் என கூறப்படுகிறது.

x