வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, உக்ரைன் போரை தீவிரப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றார். இந்நிலையில், ப்ளோரிடா வில் உள்ள தனது மார்-ஏ-லகோ எஸ்டேட்டில் இருந்தபடி கடந்த 7-ம் தேதி ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போது, உக்ரைனுடனான போரை தீவிரப்படுத்தவேண்டாம் என புதினிடம் ட்ரம்ப் வலியுறுத்தியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க ராணுவ வீரர்கள் கணிசமாக இருப்பதாக புதினிடம் ட்ரம்ப் நினைவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனுடனான போருக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்நிலையில், ட்ரம்ப் அதிபராக பதவி யேற்றால் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்ற கருத்து நிலவுகிறது.
ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறும்போது, “ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறானது. இரு தலைவர்களுக்கிடையே எவ்வித தொலைபேசி உரையாடலும் நடைபெற வில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.