கனடாவில் கோயில் தாக்குதலில் கைதான காலிஸ்தான் ஆதரவாளர் விடுவிப்பு


டொரண்டோ: கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தர்ஜித் கோசல் என்ற காலிஸ்தான் ஆதரவாளரை கனடா போலீஸார் விடுதலை செய்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ மகாணத்தில் உள்ள பிராம்ப்டன் பகுதியில் இந்து கோயில்மீது நவ.3-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பீல் பகுதி போலீஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர் இந்தர்ஜித் கோசல் என்று தெரியவந்தது. அவர் கனடாவில் உள்ள எஸ்எஃப்ஜெ-யின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறப்படுகிறது. எஸ்எஃப்ஜெ அல்லது சீக் ஃபார் ஜஸ்டீஸ் என்பது காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமாகும்.

இந்த கைது விவகாரம் தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராம்ப்டனில் இந்தர்ஜித் கோசல் என்று அறியப்படும் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நவம்பர் 8-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஆயுதத்தால் தாக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தர்ஜித் கோசல் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்பு அவர் பிராம்ப்டனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராவார்.

நவம்பர் 3, 4 தேதிகளில் நடந்த குற்றச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற சிக்கலான விஷயங்களில் விசாரணைக்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய தேசிய கொடி ஒரு மேடையின் படிகளில் விரிக்கப்பட்டிருக்கும் பின்னணில் கையில் காலிஸ்தான் கொடியை ஏந்திய படி இந்தர்ஜித் நிங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலகி வருகிறது.

முன்னதாக, கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

இந்தத் தாக்குதலின்போது அப்பகுதி வன்முறைக் களமாக மாறியது. அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது. இந்தச் சம்பவத்துக்கு இந்திய அரசும், பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

x