வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராகப் போகும் ஜே.டி.வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற தகவல் இந்தியர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். அந்த வகையில் 279 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 223 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை கண்டார். வெற்றி உறுதியான நிலையில் ப்ளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார்.
அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி "இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம்" என்று மகிழ்ச்சி பொங்க ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது, அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா சிலுக்குரி வான்ஸ் செய்திகளில் இடம்பெற்றார்.
உஷா சிலுக்குரியின் குடும்பத்தார், ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர்கள். 1970-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷா சிலுக்குரியின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான்டியாகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் படித்தவர்.
படிப்பை முடித்த பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட நிபுணராகவும் உஷா பணியாற்றியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸை சந்தித்து காதல் கொண்டார். இதைத் தொடர்ந்து இருவரும் அதே ஆண்டில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது ஜேடி வான்ஸ் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் உஷா அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்நத ஒருவர் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.டி. வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற தகவல் இந்தியர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
6 இந்திய வம்சாவளியினர் வெற்றி: அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார். அப்பகுதியிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி ஆவார். இவரது பெற்றொர்கள் பெங்களூருவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக ஏற்கெனவே பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியினர்களான ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்ரீ தானேதர் கர்நாடக மாநிலம் பெலகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். மிக்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் 39,385 வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்க்ஸை தோற்கடித்துள்ளார்.ராஜா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் பிறந்தவர். இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட்ட அவர், 1.27 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்க் ரைஸை தோற்கடித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ரோ கண்ணா கலிபோர்னியா-17 தொகுதியிலும், சென்னையில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவரான பிரமிலா ஜெயபால், வாஷிங்டன் -17 தொகுதியிலும், குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமி பெரா, கலிபோர்னியா 6- தொகுதியிலும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வென்றுள்ளனர்.
ட்ரம்ப் - மோடி உறவு: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, 47-வது அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான உறவு, வலுவான ராஜதந்திர உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான தனிப்பட்ட அரவணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.
பிரதமர் மோடி, டொனால்டு ட்ரம்ப் ஆகிய இரு தலைவர்களும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த முன்னுரிமை அளித்தனர், குறிப்பாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வதிலும், பாகிஸ்தானால் முன்வைக்கப்படும் பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதிலும் முன்னுரிமை அளித்தனர்.
சுதந்திரமான இந்தோ-பசிபிக் தொடர்பான அவர்களின் பார்வை நெருக்கமான ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் குவாட் கூட்டணியில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்கியது. 2019-ல் ஹவுடி மோடி, 2020-ல் நமஸ்தே ட்ரம்ப் போன்ற நிகழ்ச்சிகள் இரு தலைவர்களின் தனிப்பட்ட நெருக்கத்தை காட்டியது. இந்த நிகழ்வுகள் அவர்களின் பரஸ்பர நட்புறவை வெளிப்படுத்தியது. ராஜதந்திர உறவை வலுப்படுத்த உதவியது.
வரி விகிதம் மீதான கருத்து வேறுபாடுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இரு தலைவர்களின் ஒத்துழைப்பு சுகாதார திட்டங்களுக்கும் விரிவடைந்தது நினைவுகூரத்தக்கது.