இந்தியா மற்றும் மோடியுடனான உறவை வலுப்படுத்துவேன்: இந்து அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து


வாஷிங்டன்: ‘‘எனது நிர்வாகத்தில், இந்தியா மற்றும் பிரதமர் மோடியுடனான உறவை வலுப்படுத்துவேன்’’ என அமெரிக்காவில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள இந்துக்களுக்கு, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தீவிர இடதுசாரி மத எதிர்ப்புக் கொள்கைக்கு எதிராக இந்து அமெரிக்கர்களை நாங்கள் பாதுகாப்போம். உங்களின் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம். இந்தியா மற்றும் எனது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடியுடனான அமெரிக்காவின் உறவை நாங்கள் வலுப்படுத்துவோம்.

வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலையும், அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். எனது கண்காணிப்பில் இது ஒரு போதும் நடக்காது. உள்நாட்டிலும், உலகளவிலும் இந்துக்கள் நலன் பற்றி அதிபர் ஜோ டைபடனும், துணை அதிபர் கமலா ஹாரீஸும் கவலைப்படுவதில்லை. இஸ்ரேல் முதல் உக்ரைன் வரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அமெரிக்காவில் எல்லையில் நடைபெறும் பிரச்சினக்கு அவர்களால் தீர்வு காண முடியவில்லை. நாங்கள் அமெரிக்காவை மீண்டும் வலுவடைய செய்து, உலகம் முழுவதும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபத் திருவிழா, தீமையை ஒழித்து வெற்றியை கொண்டுவரட்டும். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்

x