இந்தியா நிலவுக்கு விண்கலம் அனுப்புகிறது; நம் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கின்றன: பாக். அரசியல் தலைவர் வேதனை


கராச்சி: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் முட்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் சையது முஸ்தபாகமால் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “இந்தியா நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குகிறது. ஆனால், நம் நாட்டின் மிகப் பெரியநகரமான கராச்சியில் திறந்த கழிவுநீர் தொட்டியில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கின்றன.

அடிப்படை வசதியில் நாம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். பாகிஸ்தானின் இரண்டு துறைமுகங்கள் கராச்சியில் உள்ளன. பாகிஸ்தானின் பொருளாதார இன்ஜினாக கராச்சி உள்ளது. ஆனால், இங்கு இன்னும் போதிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை.

கராச்சியில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. பாகிஸ்தானில் 2.6 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வி பெற முடியாத சூழலில் உள்ளனர். கராச்சியில் மட்டும்70 லட்சம் குழந்தைகள் இத்தகைய சூழலில் உள்ளனர்” என்றார்.

பாகிஸ்தான் அரசியல் தலைவர் இந்தியாவுடன் ஒப்பிட்டு தன் நாட்டை விமர்சித்து இருப்பது பரவலான கவனம் ஈர்த்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வலதுசாரி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்லின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. ஆனால், இன்று இந்தியா வல்லரசாக மாறஇலக்கு நிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால் ஆவதைத் தடுக்க பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

x