இலங்கையில் ஆன்லைன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட 200 சீனர்கள் கைது


ஆன்லைன் மோசடி தொடர்பாக இலங்கையின் கண்டியில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.

ராமேசுவரம்: இலங்கையில் ஆன்லைன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த15 நாட்களில் சீனர்கள் 200 பேரை இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் வெளிநாட்டைச் சேர்ந்த மர்ம கும்பல்கள் ஆன்லைன் மூலமாக பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக இலங்கையின் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார்ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

மோசடி கும்பல்கள், சமூக வலைதளங்கள் மூலம் ஆட்களைச் சேர்த்து, அதிக லாபம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து முதலீடு செய்ய வைத்ததும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தி பண மோசடி செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இலங்கையின் சுற்றுலா நகரமான கண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையின்போது, 22 பெண்கள் உட்பட 130 சீனர்கள் ஆன்லைன் மோசடி தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த ஹோட்டலில் 47 அறைகளில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து, 20 கம்ப்யூட்டர்கள், 123 லேப்டாப்கள், 206 ஸ்மார்ட் போன்கள் கைப்பற்றப்பட்டன. முன்னதாக, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாக கடந்த 6-ம் தேதி ஹன்வெல்ல நகரில் நடத்தப்பட்ட சோதனையின்போது 30 சீனர்களும், 7-ம் தேதி 19 சீனர்களும், 10-ம் தேதி பாணந்துறையில் 20 சீனர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த சம்பவம், இரு நாட்டு மக்களின்சொத்துகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமின்றி, சீனாவின்நற்பெயரைக் கடுமையாகச் சேதப்படுத்துவதாகவும் உள்ளது. கைது செய்யப்பட்ட சீனர்களின்உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்படும். அதேநேரம், அவர்களின் செயல்பாடுகளை ஒடுக்குவதற்கு இலங்கை காவல் துறைக்கு ஆதரவு அளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

x