அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு


ஸ்டாக்ஹோம்: அமெரிக்கா மற்றும் பிரிட்டனைசேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, கடந்த 1901-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்கிறது. இதர 5 பிரிவுகளின் நோபல் பரிசுக்கு உரியவர்களை ராயல் சுவீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் தேர்வு செய்கிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 7-ம் தேதி முதல் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட் டது. இறுதிகட்டமாக பொருளா தாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3 பேருக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

அரசியல், சமூக அமைப்புகளால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பின்தங்கிய நாடுகளால் ஏன் வளர்ச்சி அடைய முடியவில்லை என்பன குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. துருக்கியில் பிறந்த டேரன் அசெமோக்லு அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார். தற்போதுஇவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பிரிட்டனை சேர்ந்த சைமன் ஜான்சன் அமெரிக்காவில் குடியேறிஅந்த நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார். தற்போது இவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ராபின்சன், அந்த நாட்டின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் ஆவார். தற்போது இவர் பல்வேறு நிறுவனங்களின் பொருளாதார ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அப்போது நோபல் பரிசு வென்றவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும்ரூ.8.32 கோடி ரொக்கம் ஆகியவைவழங்கப்படும். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர் களுக்கு பரிசு தொகை பகிர்ந்து வழங்கப்படும்

x