புதுடெல்லி: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்ததால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்துக்கள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள கோயில்களில் துர்கா பூஜைநடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் கோயில்கள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வங்கதேசத்தின் சத்கிராமாவட்டத்தில் உள்ள ஜெஷோரீஸ்வரி காளி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய தங்க கிரீடம் திருடு போனது.
தலைநகர் டாக்காவின் தந்திபஜார் பகுதியில் உள்ள ஒரு கோயில் மீது வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனிடையே, துர்கா பூஜையின்போது சுமார் 35 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாகவும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீஸார் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வங்கதேச காவல் துறைஐஜி முகமது மொய்னுல் இஸ்லாம்தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீப காலமாக வங்கதேசத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்துவதிலும், சேதப்படுத்துவதிலும் ஒரு திட்டமிட்ட பாணியை சிலர் பின்பற்றுகின்றனர். டாக்காவில் உள்ள கோயில் மீது தாக்குதல் நடத்திஇருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோல காளி கோயிலில் இருந்த தங்க கிரீடம் திருடு போனது கவலை அளிக்கிறது.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது அரசு கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை பாதுகாக்கவும் வங்கதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.