சென்னை: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹான் காங் தென் கொரியாவின் குவாங்ஜுவில் 1970 இல் பிறந்தார். அவர் இலக்கியப் பின்னணியில் இருந்து வந்தவர், அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார்.
1993 ஆம் ஆண்டு முன்ஹக்-க்வா-சாஹோ (இலக்கியம் மற்றும் சமூகம்) குளிர்கால இதழில் "சியோலில் குளிர்காலம்" உட்பட ஐந்து கவிதைகளை வெளியிட்டதன் மூலம் ஒரு கவிஞராக தனது இலக்கிய அறிமுகத்தை மேற்கொண்டார் ஹான் காங். அடுத்த ஆண்டு "ரெட் ஆங்கர்" எனும் நாவலுக்காக 1994 சியோல் ஷின்முன் வசந்த இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்று நாவலாசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல நாவல், கவிதை, சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். ஹான் காங் 2016 ஆம் ஆண்டு 'தி வெஜிடேரியன்' நாவலுக்காக சர்வதேச புக்கர் பரிசை வென்றார். அவரது மிகச் சமீபத்திய நாவலான 'ஐ டூ நாட் பிட் ஃபேர்வெல்' 2023 இல் பிரான்சில் மெடிசிஸ் பரிசையும், 2024 இல் எமிலி குய்மெட் பரிசையும் பெற்றது.
முன்னதாக, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல் நேற்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.