ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்: இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை


வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 181 ஏவுகணைகளை வீசியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் ஈரானின் அணுசக்தி தளங்கள், எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த சூழலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சிஅதிபர் வேட்பாளருமான ட்ரம்ப் நேற்று கூறியதாவது: அதிபர் பைடன் கூறியிருப்பது தவறானது. ஈரானின் அணு ஆயுததிட்டம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. அந்த நாடு விரைவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறனை பெறக்கூடும். எனவே முதலில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசிதாக்குதல் நடத்த வேண்டும். அதற்கான பின்விளைவுகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைமை ஆராய்ச்சி நிலையம் நடான்சு நகரில் அமைந்துள்ளது. அதோடு டெஹ்ரான், பார்சின், பார்டோ, சாக்ஹேண்ட், நாரிகன், இஸ்பாகன், ஆரக், ராம்சர், போனப் ஆகிய நகரங்களிலும் ஈரானின் அணுசக்தி தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நேரடியாக தாக்குதல் நடத்தாது. எனினும் ஈரானை அச்சுறுத்தும் வகையில் அந்த நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு அருகில் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

2,000 முகாம்கள் அழிப்பு: ஈரானின் பினாமியாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களில் ஹிஸ்புல்லாவின் 2,000 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளன. அதோடு அந்த அமைப்பின் 60 சதவீத ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

x