அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கிய ஈரான்: மத்திய கிழக்கில் பதற்றம்


டெல் அவிவ்: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை தொடுக்க நேரிடலாம் என்றும் அவ்வாறு நடந்தால் அதன் பின்விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் நேற்று (அக்.01) அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் தற்போது அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், “சைரன் ஒலிகள் கேட்டால் பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்கவும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலை நோக்கி 400 ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. முக்கிய நகரங்களை குறிவைத்து வீசப்பட்டுள்ள இந்த ஏவுகணைகளால், அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

காசா, லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கான பதிலடியாக ஈரான் தொடுத்துள்ள இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

x