ஈரான் அதிபர் ரெய்சியின் இறுதிச்சடங்கு: இந்தியா சார்பில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்!


இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் இறுதிச் சடங்கில், இந்தியா சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹமதி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மூடு பனி சூழ்ந்த மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்தது. ஈரான் அதிபரின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், ரெய்சியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இதன் காரணமாக நாடு முழுவதும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி

இந்நிலையில் மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விதமாக துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாளை, ஈரான் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

x