ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், விபத்து நடந்த இடத்தின் அருகே மீட்புப்படையினர் நெருங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரான் நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைசி, நேற்று ஈரான் அசர்பைஜன் நாடுகளுக்கு எல்லையில் கட்டப்பட்டுள்ள அணை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பயணம் செய்த நிலையில், அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசேன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். கிளம்பிய சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்பு படையினர் விரைந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வந்த நிலையில், விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப் பகுதிகள் நிறைந்த மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அந்நாட்டின் ராணுவம், விமானப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் சம்பவ இடத்தில் மீட்பு பணிக்காக குவிந்தனர்.
சுமார் 17 மணி நேரத்திற்கு பிறகு, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்களை மீட்புப் படையினர் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் சுமார் 2 மணி நேரம் வரை பயணித்து விபத்து நடந்த பகுதியின் அருகே செல்ல முடியும் என கூறப்படுகிறது. இதனால் அதிபர் இப்ராஹிம் ரைசின் நிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த பகுதியில் மைனஸ் 2 டிகிரி வரை குளிர் நிலவும் என்பதால், விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.