கனமழை மற்றும் கடுமையான வெள்ளம் காரணமாக மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளபாதிப்பு குறித்துப் பேசிய மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்திற்கான தகவல் துறைத் தலைவர் மவ்லவி அப்துல் ஹை ஜயீம், “வெள்ளிக்கிழமை தொடங்கிய மழையினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மேலும், வெள்ளப்பெருக்கால் இம்மாகாணத்தில் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் தலைநகரான ஃபெரோஸ்-கோவில் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டது. 4,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 2,000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளது” என்று அவர் கூறினார்
கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 315 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த புதன்கிழமை, கோர் மாகாணத்தில் ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது ஆப்கானிஸ்தான் விமானப்படை பயன்படுத்திய ஹெலிகாப்டர், "தொழில்நுட்ப சிக்கல்கள்" காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் காயமடைந்தனர் என்று அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், அடிக்கடி இயற்கை பேரழிவுகளுக்கு ஆளாகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.