கிர்கிஸ்தானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் மாணவர்களுக்கு எச்சரிக்கை


கிர்கிஸ்தானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருவதால் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் தங்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் கிர்கிஸ் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கிடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தின் சில விடுதிகள் தாக்கப்பட்டன. இதில், வெளிநாட்டு மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என கூறியுள்ளது. எனினும் இந்திய மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு இந்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிஷ்கெக்கில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். நிலைமை தற்போது அமைதியாக உள்ளது.

ஆனால் மாணவர்கள் இப்போதைக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கவும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எங்கள் 24x7 தொடர்பு எண் 0555710041 ஆகும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சக தரவுகளின்படி, சுமார் 14,500 இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானில் வசிக்கின்றனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய தூதரகத்தின் மேற்கண்ட பதிவை மறு பகர்வு செய்து, 'பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கண்காணித்து வருகிறேன். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களை தீவிரமாக அறிவுறுத்துகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், கிர்கிஸ்தானில் பயிலும் பாகிஸ்தான் மாணவர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிஷ்கெக்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களின் சில விடுதிகளில் பாகிஸ்தானியர்கள் உள்பட சர்வதேச மாணவர்களின் தனியார் இல்லங்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. பாகிஸ்தான் மாணவர்கள் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஊடக பதிவுகள் இருந்தபோதிலும், இதுவரை எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை பாகிஸ்தான் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வன்முறையானது பாகிஸ்தானியர்கள் மட்டுமின்றி அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் எதிராக இருந்தது.” என குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலில் சேதமடைந்த விடுதி வளாகம்

கிர்கிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட வன்முறையில் வெளிநாட்டு மாணவர்கள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x