இலங்கை அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்... ஐ.நா பரபரப்பு அறிக்கை!


இலங்கை அரசு

போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்திற்கும், எல்டிடிஈக்கும் இடையில் இறுதிப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் எல்டிடிஈ அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டார் என இலங்கை அரசு அறிவித்ததுடன் இறுதிப்போர் முடிவுக்கு வந்தது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையும் நீடித்து வருகிறது.

இறுதிக்கட்ட போர்

இந்த போரின் போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததாகவும், இந்த போரின் போது ஏராளமானோர் காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. போருக்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் வசித்த இடங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ததுடன், இளைஞர்களைப் பிடித்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் ஈழ இறுதிப்போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அத்துடன் போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

ஐ.நா

இதுதொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியில் சீர்திருத்தங்களை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சர்வதேச விதிமீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை துரித கதியில் நிறுவ வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் உயர் பதவிகளில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அப்படித் தொடர்புடையவர்களை பெரிய பதவிகளில் நியமிக்கவும் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

x