செயற்கை நுண்ணறிவு என்பது, அடுத்த 2 ஆண்டுகளில் உலகளாவிய தொழிலாளர் சந்தையில் 40 சதவீதத்தை சுனாமி போல விழுங்க காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என்பது உயர்கல்வி பயிலும் மாணவர்கள் முதல் வேலை தேடுவோர் மற்றும் பணியில் இருப்போர் என பலதரப்பினர் மத்தியிலும், பலவகையிலான தாக்கங்களை உருவாக்கி வருகிறது. உயர்கல்வி பயில விரும்புவோர் செயற்கை நுண்ணறிவு என்பதை பிரதான பாடமாகவும், அதனுடன் தொடர்புடையவற்றை படிக்கவும் தலைப்பட்டுள்ளனர். இதர பாடப்பிரிவுகளை தேர்வு செய்வோர் மத்தியிலும், தங்கள் பாடங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் சார்ந்து கூடுதல் திறன்களை கற்றுக்கொள்ள விழைகின்றனர்.
பணி தேடுவோர் மத்தியிலும் செயற்கை நுண்ணறிவு திறன் கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த இரு தரப்பினருக்கு அப்பால் பணியில் இருப்போரை, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தங்கள் பணிகளை பாதிக்குமோ என்ற அச்சம் அலைக்கழித்து வருகிறது. டெக் மற்றும் ஐடி நிறுவனங்களில் இந்த செயற்கை நுண்ணறிவு பிரவேசம் காரணமாக ஏற்கனவே பணியிழப்போர் அதிகரித்து வருகின்றனர். இவற்றையொட்டி எதிர் வரும் ஆண்டுகளில் இந்த பணியிழப்பு மேலும் அதிகரிக்கும் என்பதே அடுத்தக்கட்ட அச்சமாக வளைய வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இதனை எதிரொலித்துள்ளார். ஜூரிச் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சுவிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 'முன்னேறிய பொருளாதார நாடுகளின் 60% பணிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 40% பணிகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரிதும் பாதிக்கப்படும்' என்று கூறினார்.
அதனை எதிர்கொள்ளும் வகையில் தொடர்புடையவர்கள் மற்றும் வணிகங்கள் செயலில் இருக்கும்படி கேட்டுக் கொண்ட அவர், "அதற்கு மக்களை தயார்படுத்துவதற்கு எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது" என்றும் அப்போது அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவின் நல்லது - அல்லாதது குறித்து பேசிய அவர், "ஏஐ என்பதை நாம் முறையாக நிர்வகித்தால், உற்பத்தித்திறனில் அபரிமித வளர்ச்சியை கொண்டு வர முடியும், ஆனால் அது மேலும் நம் சமூகத்தில் கூடுதல் சமத்துவமின்மைக்கும் வழிவகுத்துவிடும்" என்று கூறினார்.
2020 இல் உலகளாவிய தொற்றுநோயால் உந்தப்பட்ட உலகளாவிய மந்தநிலை மற்றும் உக்ரைனில் நடந்த போரின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டியவர், அண்மை ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் அதிர்ச்சிகளுக்கு ஆளாகியுள்ளது என்று கூறினார். காலநிலை நெருக்கடி காரணமாகவும் இந்த அதிர்ச்சிகளின் நீட்சியை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனபோதும் பெரும்பாலனோர் அஞ்சி வரும் வகையில் "நாம் உலகளாவிய மந்தநிலையில் இல்லை" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "கடந்த ஆண்டு பெரும்பாலான பொருளாதாரங்கள் மந்தநிலையில் நழுவிவிடும் என்ற அச்சம் இருந்தது. நல்வாய்ப்பாக அது நடக்கவில்லை" என்றவர், "மிக வலுவான சக்தியுடன் எங்களைத் தாக்கிய பணவீக்கம் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சரிவைச் சந்தித்து வருகிறது" என்று நிம்மதி தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...