இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு செல்ல இருந்த பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58). இந்நிலையில் அந்நாட்டின் போயிங் நிறுவனம் 'ஸ்டார்லைனர்' என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கி வருகிறது. இந்த ஓடம் சோதனை முறையில் இந்திய நேரப்படி இன்று காலை 8.04 மணிக்கு 'அட்லஸ் வி' ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது.
இதில் சுனிதா வில்லியம்ஸுடன், பேரி வில்மோரும் விண்வெளிக்கு செல்லவிருந்தார். ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்கலம் ஏவப்பட இருந்த 90 நிமிடங்களுக்கு முன்பு, 'அட்லஸ் வி' ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது.
ஆக்ஸிஜன் ரீலீஃப் வால்வில் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்க வழிவகுத்தது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.
சுனிதா வில்லியம்ஸ் ஏற்கெனவே இரண்டு முறை (2006, 2012) விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது 3வது முறையாக பயணம் செய்ய இருந்தார். சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் 322 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட சாதனையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.