நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!


ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த நகரமே உருக்குலைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளில் 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி அலைகள் தாக்கியதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

புத்தாண்டு தினத்தில் ஜப்பானை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 8 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 300க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

x