கென்யாவில் நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!


கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி விபத்து

கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியது. அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு ராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்தனர். அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகாப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியது.

கென்யா நாட்டு ராணுவ தளபதி பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகளை துவக்கி உள்ள அந்நாட்டு அரசு, விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

கென்யா ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்த ஒகோலா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு கென்யா நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கென்யா நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோவுடன் ராணுவ தளபதி ஒகோலா

விபத்து நடந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்தது. இதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒகோலா அந்தப் பகுதிக்குச் சென்றதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விபத்தா, அல்லது சதிவேலையா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x