டெஸ்லா நிறுவனத்தில் ஊழியர் ஒருவரை ரோபோ ஒன்று தாக்கி, காயப்படுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் டெக் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தானியங்கி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்தும் வகையில் இந்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு பொதுவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வந்த போதும், குறிப்பிட்ட சிலர் ரோபோக்களால் மனிதர்களுக்கு ஆபத்து ஏறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆங்கிலத்தில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், ’டெர்மினேட்டர்’ திரைப்படங்கள் தானியங்கி ரோபோக்கள், மனிதர்களை அடக்கியாள முயலும் சம்பவங்களை வைத்து புனையப்பட்ட கதைகளின் அடிப்படையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போதைய சூழலில் டெஸ்லா நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் தயாரிப்பில் அதீத ஈடுபாட்டை காட்டி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ ஒன்று பொறியாளரை தாக்கியதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள ஜிஹா டெக்ஸாஸ் தொழிற்சாலையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று தாக்கியதில் பொறியாளர் ஒருவர் காயமடைந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரோபோக்களை அசெம்பிள் செய்து கொண்டிருந்த போது, ஒரு ரோபோவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது அங்கிருந்த பொறியாளரை தாக்கியதாகவும், இதில் அந்த பொறியாளருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கார் தொழிற்சாலைகளில் உதிரி பாகங்களை எடுக்க மற்றும் நகர்த்த இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ரோபோ பொறியாளரை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற போது, ஏராளமான இடங்களில் தானியங்கி ரோபோக்கள் நிறுவுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்ததால், இந்த சம்பவம் அப்போது வெளிவரவில்லை எனவும், தற்போது அந்நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் எடுத்திருந்த வீடியோ வெளியாகி இந்த தகவலும் உலகம் முழுவதும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது டெக் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.