சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மே மாதம் 15- ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் ( 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் ஊழல் என்ற பேச்சுக்கு இதுவரை இடமில்லாத நிலையில் தற்போது ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு எம்.பி-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் லீ சி யென்னும் அடுத்த மாதம் (மே) 15-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் நாட்டுக்கு புதிய பிரதமர் பதவி ஏற்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம். நான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்பார்" என அவர் கூறி உள்ளார். இந்த நிலையில் பிரதமரின் ராஜினாமா அறிவிப்புக்கு சிங்கப்பூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.