48 ஆண்டுகள் சிறைவாசம்... விடுதலையான நிலையில் புற்றுநோய் பாதிப்பு... குவியும் மனிதாபிமான உதவிகள்!


க்ளின் சிம்மன்ஸ்

செய்யாத தவறுக்கு சிறைசென்று 48 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு விடுதலையானவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மனிதாபிமான உதவிகள் குவிந்து வருகிறது.

கடந்த 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியில் இருந்த எட்மண்ட் மதுபானக் கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அப்போது அங்கு கரோலின் சூ ரோஜர்ஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் க்ளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிம்மன்ஸ், தான் ஒரு நிரபராதி என்றும், கொலை செய்யப்பட்ட நேரத்தில் தான் லூசியானாவில் இருந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்தது. தனது 22 வயதில் சிம்மன்ஸ் சிறை சென்றார்.

சிறை சென்ற போதும், தற்போதும் க்ளின் சிம்மன்ஸ்

தொடர்ந்து சிம்மன்ஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இருப்பினும் இடைவிடாமல் தனது முயற்சியை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சிம்மன்ஸ் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

சுமார் 48 ஆண்டு 1 மாதம் 18 நாட்கள் கழித்து சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தனது 22-வது வயதில் சிறை சென்ற சிம்மன்ஸ், தனது 71-வது வயதில் வெளியே வந்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது அவருக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை, இவற்றிற்கு மத்தியில் புற்றுநோயுடனும் போராடி வருகிறார். இதனால் இவரது உடல் மற்றும் இதர செலவுகளுக்கு பலரும் உதவி வருகிறார்கள். இது தற்போது சிம்மன்ஸுக்கு ஆதரவாக இருக்கிறது. தவறான தண்டனைக்காக சிம்மன்ஸுக்கு 1.75 லட்சம் டாலர் வரை இழப்பீடாக வழங்கப்படவுள்ளது. அதை வைத்து சிகிச்சை பெறப்போவதாக சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

x