கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது அடுத்த கட்டமாக புதிய COVID-19 வகை JN.1 பாதிப்பு கண்டறியப் பட்டிருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் உலகை அச்சப்பட வைத்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா தொடர்பான அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, பாண்டிச்சேரியிலும் பாதிப்புகள் தீவிரமாகும் நிலையில் தற்போது சீனாவில் புதிய COVID-19 வகை JN.1 பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய வேரியண்ட் கொரோனா வைரஸ் பாதித்த 7 பேரை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் மற்ற கொரோனா நோயாளிகளை விட இன்னும் தீவிரமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடலில் நடக்கும் மாறுபாடுகள், நோயின் தன்மை, பாதிப்பு ஆகியவை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
2023 ம் ஆண்டில், கோவிட்-19 தொற்று வெகுவாக குறைந்திருந்தன, ஆனால் டிசம்பரின் தொடக்கத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக, WHO தெரிவித்துள்ளது. சீனா தவிர மேலும் பல்வேறு நாடுகளில் புதிய துணை மாறுபாடு JN.1 பாதிப்பு அதிகரித்திருப்பது கவலைகளை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக விடுமுறைக்கு முன்னதாக அமெரிக்கா, சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் திடீரென கொரோனா பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியது.
வைரஸின் துணை வேறுபாடு முற்றிலும் புதியதல்ல மற்றும் சில மாதங்களாக பல நாடுகளில் சிறிய எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் கூற்றுப்படி, கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸின் மாறுபாடான JN.1, BA.2.86 என்ற மாறுபாட்டுடன் அதிக தொடர்புடையதாக உள்ளது. ஸ்பைக் புரதத்தில் JN.1 மற்றும் BA.2.86 இடையே ஒரே ஒரு மாற்றம் மட்டுமே உள்ளது.
இந்தியாவில் கோவிட் பாதிப்பு சமீபத்தில் அதிகரித்திருப்பதற்கு ஜே.என்.1 வைரஸ் முக்கியமான காரணியாக இருக்கலாம் என்று தேசிய இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 1,296 ஆக உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.56 லட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.