ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை முதல் பாக். பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு: பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது. இது குறித்து, இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தை ஹிஸ்புல்லா உறுதி செய்தது. இதுகுறித்து ஹிஸ்புல்லா இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நஸ்ருல்லா தனது சக தியாகிகளுடன் இணைந்து கொண்டார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவான, எதிரிகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும் என ஹிஸ்புல்லாக்கள் உறுதி எடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஹசன் நஸ்ரல்லா?: கிட்டதட்ட 32 ஆண்டு காலமாக ஹிஸ்புல்லா அமைப்பின் சக்திவாய்ந்த தலைவராக இருந்தவர் ஹசன் நஸ்ரல்லா. இஸ்ரேலை வீழ்த்த ஓர் உறுதியான அமைப்பு தேவை என்று முடிவெடுத்த போராளி குழுக்களால் உருவாக்கப்பட்டது ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1992-ஆம் ஆண்டு அப்போதைய ஹிஸ்புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஹசன் நஸ்ரல்லா தலைமையில் ஹிஸ்புல்லா அமைப்பு இயங்க ஆரம்பித்தது.

ஹசன் நஸ்ரல்லா, ஈரானுடன் நெருக்கமான உறவு கொண்ட ஒரு நபராக அறியப்படுகிறார். அதோடு, ஹிஸ்புல்லாவை ஓர் அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர். இவரது தலைமையின்கீழ், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இன்று லெபனான் அரசாங்கத்தை வழிநடத்தும் முக்கிய இடத்தில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்புதான் ஹமாஸை முழுமையான ஆயுதம் தாங்கிய போராளிக் குழுவாக உருவாக்கியது. இவை அனைத்துக்கும் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்தது நஸ்ரல்லாதான். அவரைக் கொல்ல இஸ்ரேல் பல ஆண்டுகளாக திட்டம் தீட்டி வந்த வந்தது கவனிக்கத்தக்கது.

ஈரான் உயர் தலைவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு: இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டுள்ளதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ஈரானின் வெளியுறவு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புரட்சித் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் புனிதப் பாதை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

“31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு” - முதல்வர்: “திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்: “திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது. மேலும், மயானத் தொகை வரைவோலை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, திராவிட மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கைது: காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சனிக்கிழமை நடைபயணமாக வர முயன்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறைக் கைதிகளுக்கான விதிகள் - ஐகோர்ட் உத்தரவு: புழல் சிறையில் கைதிகள் தங்களது வழக்கறிஞர்களுடன் இண்டர்காம் மூலமாக மட்டுமே பேச வேண்டும் என விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதுபோல எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என சிறைத் துறை நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடிக்கு ஃபரூக் அப்துல்லா அறிவுரை: “நமது பிரதமருக்கு நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். தயவு செய்து ஒன்றுக்கு இரண்டு தடவை அல்ல, 100 தடவை சிந்தியுங்கள். அண்டை நாடுகளுடன் அமைதியான தீர்வை கண்டடைய வேண்டும். நட்பு நாடுகளை மாற்ற முடியும். அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அண்டை நாடுகளுடன் நட்புறவைக் கடைப்பிடித்தால், நாம் முன்னேறுவோம், வேகமாக முன்னேறுவோம்” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

“ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி...” - மோடி கணிப்பு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜம்முவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்த விஜயதசமி புதிய புனித தொடக்கமாக இருக்கப் போகிறது. ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி வரப்போகிறது” என்றார்.

ஜெகன் மோகன் ரெட்டி புது விளக்கம்: திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானமே பொறுப்பு என்றும், அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாக். பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின் பேச்சு ‘பாசாங்குதனத்தின் மோசமான நிலை’ என்று சாடியுள்ளது.

ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் பிரதிநிதி பவிகா பேசும்போது, “வருந்தத்தக்க வகையில் இந்தச் சபை ஒரு கேலிக்கூத்தான விஷயத்தைக் கண்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இந்தியா பற்றிய பேச்சைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன். பாகிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்பது உலகம் அறிந்தது. இத்தகைய ஒரு நாடு எல்லா இடங்களிலும் பயங்கரவாதம் பற்றிப் பேசுவது பாசங்குத்தனத்தின் மோசமான நிலையேயாகும்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நவ.26-க்குள் தேர்தல்: மகாராஷ்டிராவின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியோடு முடிவடைவதால் மாநில தேர்தல் அதற்கு முன்பாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

x