இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!


இந்திய கப்பல்

இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் படையான ஹவுதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்று ஏமன் கிளர்ச்சிப்படையான ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து அந்த வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் அந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் நார்வே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி அமைப்பு நேற்று இரவு இந்திய கப்பலையும் தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், " இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு கா்நாடகத்தின் மங்களூரு துறைமுகத்திலிருந்து மாா்ஷல் ஐலண்ட் கொடியுடன் செங்கடலில் வந்து கொண்டிருந்த 'ஆா்ட்மா் என்கவுன்டர்' கப்பலை நோக்கி புதன்கிழமை அதிகாலை 2 ஏவுகணைகள் வீசப்பட்டன.

முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டெப் நீரிணைக்கு அருகே அந்தக் கப்பல் வந்துகொண்டிருந்தபோது, ஹவுதி கிளர்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியிலிருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டன. எனினும், அந்த ஏவுகணைகள் குறி தவறிக் கடலுக்குள் விழுந்தன. இந்தச் சம்பவத்தின்போது கிளர்ச்சியாளா்களின் டிரோன் ஒன்றை அமெரிக்க போா்க் கப்பல் சுட்டுவீழ்த்தியது" என்று அதிகாரிகள் கூறினா்.

ஹவுதி கிளா்ச்சியாளர்களால் குறிவைக்கப்பட்ட எரிபொருள் கப்பலில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலா்கள் இருந்ததாகவும், படகில் வந்து அந்தக் கப்பலில் ஏற முயன்றவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அந்தப் பாதுகாவலர்கள் விரட்டியடித்ததாகவும் தனியாா் உளவு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.

ஹவுதி படை

காஸா போா் விவகாரத்தில் எரிபொருள் கப்பல் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறையாகும். எனினும், இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளா்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கடந்த திங்கள்கிழமை இரவுகூட, நாா்வே கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றின் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை என்று அந்தக் கப்பலை இயக்கி வரும் நிறுவனம் தெரிவித்தது.

இதுபோன்ற தாக்குதல்களால் ராணுவரீதியில் எந்தப் பலனும் இல்லை என்றாலும், யேமனில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக கிளா்ச்சியாளா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பிரபல நகைச்சுவை நடிகர் கடத்திக் கொலை!

கடும் பனிப்பொழிவு... சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

x