கொல்கத்தா: பாக்தாத்தில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு சென்ற ஈராக் ஏர்வேஸ் விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 16 வயது ஈராக் சிறுமி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.
பாக்தாத்தில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு ஈராக் ஏர்வேஸ் (IA-473) விமானம் 100 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த 16 வயது ஈராக் சிறுமி டேரன் சமீர் அகமதுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவால் உடனடியாக பயணிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. விமான நிலைய சுகாதார அதிகாரி பரிசோதித்தபோது, அந்த இளம்பெண்ணுக்கு நாடித் துடிப்பு இல்லை, இதயத் துடிப்பும் இல்லை. இதனையடுத்து உயர்சிகிச்சைக்காக பயணியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவர் பரிந்துரைத்தார்.
இதனையடுத்து அந்த விமானம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு 10:18 மணிக்கு தரையிறங்கியது. சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு அந்த இளம்பெண்ணும், அவருடன் இருந்த இரண்டு பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் ஏஏஐ ஆம்புலன்ஸ் மூலம் சார்னாக் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அந்த சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சார்னாக் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் அளித்த தகவலின் பேரில், பாகுயாதி போலீஸார் இது இயற்கைக்கு மாறான மரணம் என்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈராக் சிறுமியின் உடல் சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.