200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்


சோப்புக்கட்டிகள் கொண்டு நகர்த்தப்பட்ட கட்டிடம்

கனடாவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான, 220 டன் எடையிலான கட்டிடத்தை இடமாற்றம் செய்ய 700 சோப்புக்கட்டிகளை கொண்டு பொறியாளர்கள் புதுமையாக சாதித்துள்ளனர்.

நோவா ஸ்கோடியாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ளது விக்டோரியன் எல்ம்வுட் என்ற பிரம்மாண்ட கட்டிடம். ஹோட்டலாக செயல்பட்டு வந்த சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம், அண்மையில் இடித்தாக வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டது. அதற்கு மாறாக கட்டிடத்தை இடம் பெயர்ப்பதன் மூலம் அதன் ஆயுளை அதிகரிக்க முடிவானது. இதற்கு வழக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தாது, ஐவரி சோப்புக்கட்டிகளை உபயோகித்து கட்டிடத்தை அதன் மாற்றிடத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

1826-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் விக்டோரியன் எல்ம்வுட் ஹோட்டலாக புகழ்பெற்றிருந்தது. 2018-ல் இடிந்து விழும் நிலையை இந்தக் கட்டிடம் எதிர்கொண்டபோது, அதன் வரலாற்று பின்புலத்துக்காக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியது. பின்னர் அதனை புதிய இடத்திற்கு நகர்த்தவும் திட்டமிட்டது. இன்னொரு அடுக்குமாடி கட்டிடத்துடன் இணைப்பதன் மூலம் இந்த பழைய கட்டிடத்தின் ஆயுளை அதிகரிக்க முடிவானது.

சவாலான இந்தப் பணியில் நவீன தொழில்நுட்பங்களுக்கு மாற்றாக வினோத முயற்சியை பொறியாளர்கள் கையில் எடுத்தனர். பாரம்பரிய உருளைகளை பயன்படுத்தாது, ஐவரி சோப்பால் செய்யப்பட்ட 700 பட்டைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி டிரக்குகள் கொண்டு இழுக்கப்பட்டதில், சோப்புக் கட்டிகளில் சறுக்கிக்கொண்டு 30 அடிகள் அப்பால் கட்டிடம் நகர்ந்து சென்றது. இந்த வெற்றிகர நிகழ்வினை ஃபேஸ்புக்கில் வீடியோவாகவும் பகிர்ந்துள்ளனர்.

x